பக்கங்கள்

“ஹாய்..! என்றாள் என் தாய்…!”

இன்று காலை…
விடிந்ததும் 
வெளியில் வந்து சாலையை பார்த்தேன். 
ரோடு புகை பிடித்துக் கொண்டிருந்தது. 

பக்கத்து வீட்டு ஐயப்பன், 
குப்பைகளை கூட்டி, தீ வைத்திருந்தார். 
காய்ந்த இலை சருகுகள், 
தீயின்றி, 
புகை மட்டும் பரப்பிக் கொண்டிருந்தது. 
காரணம் தென்றல்.

மனம் சட்டென பதறியது. 
டால்மேஷியன் எங்கே?.. 

எங்கள் வீட்டு தெரு நாய், 
ஒரு வாரம் ஆகிறது 
இரண்டு அழகிய குட்டிகள் பெற்று. 

ஒன்று பார்ப்பதற்கு 
டால்மேஷியன் ஸ்டைலில் இருப்பதால்.. 
நானே வைத்த பெயர் 
டால்மேஷியன். 

அதனிடம் இன்னும் சொல்லவில்லை,
இன்றும் சொல்லவில்லை…  
இன்றாவது அதை சொல்லிவிட வேண்டும்.
அதன் பெயர் டால்மேஷியன்.. என்று…!!!

டால்மேஷியன் எங்கே… 
பஞ்சு கால்களும்
பிஞ்சு பாதங்களும் 
நடை பழகாத இடுப்பும்,… மை காட், 
மனம் ஏனோ பதறியது.. 

கண்கள் அங்குமிங்கும் அலைய 
ஆட்டோவுக்கு கீழ், 
செடிகளின் உள்ளே என தேடினேன்… 
சில வினாடிகள் மட்டுமே. 

ஆம், 
சில வினாடிகள் மட்டுமே.

சட்டென மனம் சொன்னது 
“டேய்!.. தீய பாத்தா.. அதெல்லாம் ஓடிறும்..” 

”ஆமாயில்ல..!” 

என்று மனம் மனதிடம் பேசி சொன்னது.. 
நான் இலகுவானேன்.. 
அடுத்த வேலையைப் பார்க்க ஆயத்தமானேன்…

ஆனால்…

“ஹாய்..! என்றாள் என் தாய்…!” 
என் தமிழ்த்தாய், 
என் உணர்வுகளில் கலந்திட்ட என் தாய், 

அடுத்த வீட்டு ஐயப்பன்… 
எரியாத தீ… 
காணாத டால்மேஷியன்.. 

என அடுக்கடுக்காய் அடுக்கிய என் சிந்தனையும் 
அதனால் விழைந்த 
என் உணர்வுகளும் 
உணர்ச்சிகளும், 
என் தாயின் வரவால்.. 
வார்த்தை 
எனும் வடிவம் பெற்றது.

என் தாய்.. 
வலியே இன்றி….
ஒரு குழந்தையை ஈன்றாள்… 
உணர்வும் உணர்ச்சியும் - ஒரு வடிவம் பெற்றது.. 

அதை கவிதை 
எனச் சொல்லும் துணிவு இல்லை.. 
என்றாலும், 
பகிர வேண்டும் 
எனும் துணிவு மட்டும் இருக்கிறது.

இதோ..
அன்புடன் அதை, பகிர்ந்து கொள்கிறேன்…






தாயே - நீங்கள் வாழ்க…

மகளிர் தினம் -

புதுயுகம் தொலைக்காட்சியில் - சிறப்பு விருது நிகழ்ச்சி .

கொரானா பெருந்தொற்று… நம்மை முடக்கி போட்டது உடலாலும் – மனதாலும்...

நாம் பயம் கொண்டோம்…

இந்த சோதனையான காலத்தில்.. போற்றுதற்குரிய… இந்த மனித தெய்வங்கள் நமக்காக பணியாற்றியது.…..

துணிவை துணையாக்கி
கனிவை தனதாக்கி
மகிழ்வோடு - தன்னலமற்ற தொண்டாற்றிய இந்த அன்னைகளின்….

குணங்களை சொல்ல… இறைவன் எனக்கு கொடுத்த வாய்ப்புக்கு நான் நிறைவு கொள்கிறேன்…

தாயே.. நீங்கள் வாழ்க…
இந்த மங்கைகளின் விருது விழா எனக்கு மகிழ்வாய் இருந்தது…

தாயே… !!!
உங்கள் மனத் திடத்தின்.. ஒரு படி
உங்கள் கனிவின் ஒரு துகள்
உங்கள் தன்னலமற்ற சேவையின் ஒரு பிடி…
இந்தப் பிள்ளைக்கு தாருங்களேன்

96 - (திரை விமர்சனம்)

“நேத்து தியேட்டர்ல ’96’ சினிமா பாத்தேன்…”
“படம் எப்படி…?”
“நல்லாயிருக்கு…!”
“ஓ..!! அப்படியா.. நல்ல படமா…”
“இல்ல.. நல்ல படமில்ல…!”

“என்னது..!!! நல்ல படமில்லையா..? நல்லாயிருக்குன்னு இப்ப சொன்ன…”

“ஆமா.. நல்லா எடுத்துருக்காங்க… ஆனா நல்ல படம் இல்ல…”
நே!...

“அற்புதமான டேக்கிங்.. அசத்தலான கேமரா… அடி தூள் நடிப்பு… அமர்க்களமான டைரக்‌ஷன்… செம எண்டர்டெயினர்.. ஆனா.. படம் நல்ல படமில்ல…”
“யோவ்.. இவ்வளவும் இருந்தா அது நல்ல படம்யா…”

“ம்…… நல்ல படமில்ல…. எப்படிச் சொல்றது….!!!! சரி, ஒரு கேள்வி… நீ படம் பார்த்துட்டல்ல…. இந்த 96 படத்துக்கு இரண்டாம் பாகம் எடுத்தா எப்படி இருக்கும்.. கொஞ்சம் யோசி…. ம்.. ஜானு சிங்கப்பூர் ஏர்போர்ட்ல இறங்கிறா.. அங்க அவளை வரவேற்க புருஷனும்… புள்ளையும் நிக்கிறாங்க.. அங்க தொடங்குங்களேன்.. படத்த… பப்பரப்பான்னு பல்லு இளிக்கும்…

இதுவரைக்கும் குழப்பமில்லாம போன ஒரு குடும்பத்துல அனாவசியமான குழப்பங்கள்.. இல்லியா.. அது போக, இந்த ஜானு இனிம இயல்பா இருக்க முடியுமான்னு நாமளே கேட்டுக்க வேண்டியது தான்.

தோழமையே… இந்தப் படம் இன்னிக்கு செம ஹிட்டு…… படத்த பார்த்துட்டு வந்த என்னோட காண்டக்ட் ஒருத்தர் சொன்னாரு.. கிளைமாக்ஸ்ல ஏர்போர்ட் சீன்ல.. கலக்கி எடுத்துட்டாங்க… ஐய்யோ.. அந்த புள்ள… ஜானு….  திரும்பி வந்துறாதான்னு… முழு தியேட்டருமே.. ஏங்குது.. அவ ப்ளேன்ல போனதும் மொத்த தியேட்டருமே அழுதுன்னாரு…

அடப் பாவிங்களா.. என்னது தியேட்டரே அழுவுதா….???? தினம் தினம்… நியூஸ் பேப்பர்ல வாசிக்கிறோமே… கள்ளக் காதலன்… கட்டின புருஷன கல்ல தூக்கிப் போட்டு கொண்ணுட்டான்னு… %#@#$%^^@!...... ஏர்போர்ட்ல ஏறாம அந்தப் புள்ள திரும்பி வந்தா… அந்தக் கதைடா இது…

தமிழ் மொழிக்குன்னு.. தமிழ் இனத்துக்குன்னு ஒரு பண்பாடு இருக்குடா…. தமிழ்ல சொல்லுவாங்களே… ஒரு வார்த்தை… நூத்துல ஒரு வார்த்தை…
ஆண்மை என்றால் என்ன என்பதற்கான விளக்கம் அதுல இருக்குடா…..  

ஆண்மை… !!!!

ஆண் என்பவன் எப்படி இருக்கணும்ன்னு… ?????

‘பிறன் மனை நோக்கா பேராண்மை’ …என்ற உயர்ந்த தத்துவம் சொன்ன கலாச்சாரம்டா… எங்கடா போச்சு உங்க புத்தி… ஏண்டா… நாகரீகம்ங்கிற பேரில.. நருவீசுங்கிற பேரில.. ஓழுக்கக் கேட்டையும்… ஓழுங்கினத்துக்கும் ஓசாரம் பாடுறீக…

நல்லா கேட்டுக்கோங்க…

காதலுறுவதும்.. காமுறுவதும்… இயல்பு.. அதிலும் குறிப்பாய் இளமையில் இளகுவது… இயல்போ இயல்பு…. மனித இயல்பு… ஆண் பெண் எனும் பாகுபாடு அதில் இல்லை. அதில் தவறும் இல்லை.. குறிப்பாய் பள்ளிப் பருவத்தில் வருவது… ஒரு எதிர் பாலின ஈர்ப்பு…. இது பக்குவக்கப்பட்ட காதலா… !!!!! ??????

காதல் என்னும் வார்த்தைக்கும் வாழ்கைக்கும் விளக்கமே அறியாத வயதில்.. வெறும்..உணர்வுகளினால் உந்தப்பட்ட… ஒரு மன மகிழ்வின் உச்சம். அவ்வளவு தான்... 

காதலை…..,!!! மேலே நாம் சொன்ன காதலை… இளமையில் கொண்டிருந்தால்... அறியாமல் தெரியாமல் அது நம்மோடு ஒட்டிக் கொண்டிருந்தால்...  என்று அது நிறைவேறாது என ஆகிறதோ.. 

அப்போது.. அக்கணமே.. அதை விட்டு விலக வேண்டும். 

மனித வாழ்வில் பெண், காதல், இன்பம் என்பவை ஒரு அங்கம் தானே அன்றி.. அது மட்டுமே வாழ்க்கை அல்ல… 

உலகம் என்பதே ஆண்/ பெண் என்பதாகவும், அக்காதல் என்பதாகவும் சித்தரிப்பது அரைவேக்காட்டுத்தனம்.

திருமணம் எனும் பந்தத்தில் நம்பிக்கை கொண்டு, தாலி கட்டியவுடன்… பிறன் மனை நோக்கா பேராண்மையுடன்… வாழ வேண்டும்… அதை விடுத்து… பள்ளி நாட்களில் அப்பெண்ணிடம் இருந்து திருடிய… அவள் உடையை.. வருஷங்களாக பெட்டியில் வைத்து.. அதை தடவித் தடவிப் பார்ப்பது.. மன நோய்…

இப்படம்.. அப்படி ஒரு மன சிக்கலையும்… உறவின் சிக்கலையும்… சமூக சிக்கலையும்… நட்சத்திர உணவு விடுதியின் தரத்தில் பரிமாறுகிறது..

கழுதை மூத்திரத்தை.. கப்புல ஊத்தி கொடுத்தா.. அதை மொடக்கு மொடக்குன்னு குடிச்சுட்டு வர்ற.. அப்புராணி குரூப்புடா… நம்மாளுங்க….
அப்பாவி சமூகம்டா.. படுபாவிகளா…
இங்க உள்ள நிறைய பேருக்கு இறங்கிறதுக்கு முன்னால… அது குழியா.. சுழியான்னு தெரியாம.. கால உட்டுப்புட்டு.. அப்புறமா… குத்துதே.. குடையுதேன்னு கூப்பாடு போடுற கூட்டம்டா….

திரைப்படங்கள் வர்ற மாதிரியே… ஹேர் ஸ்டைல் வச்சுக்கிறேன்.. அதே மாதிரி ட்ரஸ் போட்டுக்கிறேன்…. அதில வர்ற மாதிரியே பேஸ்ரேன்… என அலையுற… ஒரு குரூப்பு இருக்கேடா…

கடந்த காலம் என்பது எப்போதுமே.. எந்த வடிவிலுமே... ஒரு இனிமை தரும்.. சுகம் தரும்… முப்பது வருசத்துக்கு முன்னால … எனும் எதுவுமே… சுகம் தான்…

பத்து வயசில சாப்பிட்ட பரங்கிக்காய் கூட பவுசு தான்…

இந்த இதம்.. சுகம் … பெண்ணின் நினைவு மட்டும் தான்.. அவளின் காதல் மட்டும் தான் எனும் தப்பான அனுமானங்கள் ஆபத்தானவை…

பெண், ஆண் இருவரும் இரு இயல்புகளில் இங்கு இயங்குகிறார்கள். அன்பு வயப்படுவதும், அன்பால் இணைவதும் அற்புதம். இணைந்த காதலுடன் வாழ்வை எதிர் நோக்குவது பெருமை.

பெண் அலங்காரமானவள்.. ஆனால் அற்புதமானவளோ அல்லது தேவதையோ அல்ல… அவளும் நம் போல் சக மனுஷி… அவளை உயர்த்தவும் வேண்டாம்… தாழ்த்தவும் வேண்டாம்… பிரிதொரு உயிரை… நேசிக்கவும் விரும்பவும்… உதவவும்.. மதிக்கவும் இருக்கும் மன திடமே ஆரோக்கியமானது. பெண்ணுக்கும் இது பொருந்தும்.

ஒரு ஆடவன் தன்னை விரும்புகிறான் ஆராதிக்கிறான் என்றால் உடனே அதில் ஆணவம் கொள்வதோ, தன் இருப்பை புரியாது இயங்குவதோ அவளே அவள் வாழ்க்கையை சிக்கலாக்கி கொள்வதும் ஆபத்தானவை.

”புள்ளி வைத்து பரவும் கோடுகளே கோலங்கள்….!
சமூக விதி மீறல்கள் – உறவுச் சிக்கல்கள் அலங்கோலங்களே….!!”

மறுபடியும் சொல்றேன்… அமைதியான, கவித்துவமான… காட்சி அமைப்புக்கள்.. ஆழமான உணர்வுகளை அம்சமாக சொல்லும் திறன்.. எல்லாம் செமயா இருக்குது… மொத்த மக்களையும் கட்டிப் போடுற மேஜிக் எல்லாம்.. வியப்பா இருக்குது… ஆனா…. சொல்ற கருத்துல கவனம் வையுங்க…

திரைப்படங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.. சினிமாவ ஆக்கபூர்வ ஆயுதமாக்குங்கள்…
நாம பாடுற பாட்டும்… ஆடுற கூத்தும்…
படிப்பினை தந்தாகணும்…
நாட்டுக்கு படிப்பினை தந்தாகணும்…
படம் எடுக்கும் போது பாத்து எடுங்க…

ரேடியோவில் எனது நாடகம்

தீபாவளி ஸ்பெஷல்… சென்னை ஆல் இந்தியா ரேடியோவில் எனது நாடகம் ஒலிபரப்பாகிறது.

நாடகம் எதைப் பற்றி…


இந்த நாடகம் எழுத என்னை தூண்டியது இந்த தகவல்தான்… ஆம், எம்.ஜி.யார். காலத்து தகவல்கள்….
  • 1.   தன் வீடு – இயற்கையாக இருக்க வேண்டும். சுற்றி தோட்டம் அமைத்து, மிகப்பெரியதாக இருக்க வேண்டும். நகரத்தின் வாசனை இல்லாமல், அழகிய சூழ் நிலையில் தூரமாய் இருந்தாலும் பரவாயில்லை…. ஊருக்கு வெளியே பெரியதாக இருக்க வேண்டும் என அவர் தேர்ந்தெடுத்த இடம் … ராமபுரம். அன்றைய சென்னையில் சைதாப்பேட்டை தான் சிட்டி…
  • 2.   சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்துக்கும் – அழிந்து போன மூர் மார்கெட்டும் இடையில், சென்னை மிருகக் காட்சி சாலை இருந்தது. நகரின் மத்தியில் இருந்ததால், மாசு பட்ட சூழலில் மிருகங்கள் இறக்க நேரிட்டது. எனவே, எம்ஜியார் ஊருக்கு வெளியே வண்டலூரில் மிருகக் காட்சி சாலை அமைக்க திட்டமிட்டார்.

என்னது… மிருகக் காட்சி சாலையா…. ஊருக்கு வெளியேயா….????? அதுவும் 30 கி.மி. அந்தப்பக்கமா… ….????? காட்டுக்குள்ள வைச்சா பொது மக்கள் எப்படிப் போவாங்க என விமர்சனங்கள் எழுந்தன. அவர் தீர்மானமாய் வண்டலூரில் அந்த குன்றுகள் சூழ்ந்த காட்டையே தேர்ந்தெடுத்து மிருகக் காட்சி சாலை அமைத்தார்…

இன்று…

ஒரு ஐம்பது வருடத்தில்.. என்ன ஆச்சு.. ராமபுரம் சிட்டி செண்டர்.. வண்டலூரில் பேருந்து நிலையம் அமைக்க திட்டம். இப்படி, நகரம் விரிந்து பரந்து விட்டது. நம் தேவைகள் அப்படி.
அன்றைய வீடுகளைப் பாருங்களேன்.. குறைந்தது ஒரு ஒன்றரை கிரவுண்டு.. சுற்றி இடம். மரங்கள் செடிகள், கிணறுகள். ஆனால் இன்று..
அடுக்கு மாடிக் கட்டிடங்கள் அல்லது தனி மனையா.. அரை கிரவுண்டில் வீடு என சுருக்கிக் கொண்டாலும் கூட நம் தேவைகள் நிறைவு பெறவில்லை..

சரி, இன்னும் ஒரு ஐம்பது வருடத்தில் என்னவாகும்… ????

100 வருடத்தில்… ????

நம் தேவைகளும் பெருகுமல்லவா .மேலும் இது வெறும் நிலம் குறித்தது மட்டுமல்ல. இன்னும் நம் மனிதர்களுக்கு அவசியமான நீர், காற்று, மண் வளங்கள், போக்குவரத்து.. இப்படி எத்தனை எத்தனையோ…

50 வருடத்துக்கு முன் அமைத்த நம் திட்டங்களும் தேவைகளும் இன்று புதிய பரிமாணத்தில் இருப்பது உண்மை.. நிதர்சனம். நாம் எதிர்பார்ப்பதை விட காலங்கள் வேகமாக சுழலுகின்றன..

இன்று பாருங்களேன்.. காற்றின் மாசு அளவை சொல்லி.. இதோ வெடி வெடிக்க நீதிமன்றம்  - நேரம் குறித்து நிர்பந்திக்கிறது…

இயற்கை சூழலின் இன்றைய நிலையை அடிப்படையாக்கி அறிவியல் புனைவு எனும் விதத்தில் - கற்பனைத் தேரில் ஏறி,  பொழுதுபோக்கு அதிரடி நாடகம் எழுதியிருக்கிறேன். 

அந்த ஒலிச்சந்தி கையில் கிடைத்ததும், பதிவேற்றுகிறேன்.


சென்னையில் வாய்ப்பு இருப்பவர்கள்- நேரலையில் கேட்டு மகிழலாம்.. நன்றி வணக்கம்.

மழை என் தாய்...! (கவிதை)


அகன்ற வானத்திலா!
உன் அன்பிலா…
சிலு சிலு காற்றிலா!
உன் இனிமையிலா…

உள்ளிருக்கும் உயிர்ப்பிலா!
உன் உயிர் தந்த உதிரத்திலா….
செருமும் இடியிலா!
உன் கண்டிப்பிலா…

ஊடறுத்து உள் செல்லும் சிலிர்ப்பிலா…

எதில் அம்மா
உன்னைக் கண்டேன்….

நின் குளிர்வித்தலிலும்
நின் நீர் தருதலிலும்
நின் இனிமையிலிலும்
நீ தரும் மகிழ்ச்சியிலும்

எதுவென சொல்லத் தெரியவில்லை

ஆனால் மழையில் ….
நான்
என் அன்னையை கண்டேன்….

மழையை 
என் அன்னையாகக் கண்டேன்….

-----

என் ’தாய் மாமன்’ - தொலைபேசினார்.

“பிரபா…! ’வாழ்க்கை புக்’ வாசிச்சேன்.... நல்லாயிருக்கும்மா…. 'சமர்ப்பணம்’ன்னு - அப்பா அம்மாவ ஏன் போடல…?”

சட்டென உதடு கடித்தேன். கை விரல் உதறினேன்.

“ஐய்யோ… மாமா…! விட்டுருச்சு… அடுத்த பதிப்புல சேர்த்துருவோம்..”

“சரிம்மா…."

தொலைபேசியை கீழ் வைத்துவிட்டு – வானத்தை பார்த்தேன். கருமேகங்கள் மழையை பிரசவிக்க தயாராய் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது.

”சாரிம்மா… சாரி டாடி! விட்டுருச்சு”

வானத்தில் மேகங்களுக்கு இடையில் சிறிய செருமல்…..

செருமலின் வழியே ஒரு சிந்தனை - ’பளிச்’ மின்னலென...! ”முதல் அத்தியாயம் பெற்றோர்களையும், அவர்கள் குணங்களையும் - நாம் அவருக்கு செய்ய வேண்டிய கடமைகளையும், சொல்லுதில்லியா…! ஒரு அத்தியாயமே இருக்குதே…!”

நினைத்தது நானா…? அல்லது….! என் அன்னையும் தந்தையும் இதைச் சொல்கிறார்களா….? அல்கெமிஸ்ட் PAULO CAELHO சொல்வது போல….

ஒரு மழைத்துளி - சட்டென இறங்கி என் தேகம் தொட்டது. குளிர்ந்த நீர் காற்றோடு இணைந்திருந்ததில்… மேனி சட்டென சிலிர்த்தது. என் உடல் மொத்தமும் புல்லரித்தது. கண்கள் வெப்பமாய் ஒரு துளி நீரை பிரசவித்தது. 

மனதினுள் சட்டென ஒரு வாக்கியம் ஓடியது.

மழை என் தாய்….

அது கவிதையாய் என்னுள் உணரப்பட்டது. இதோ உங்களின் பார்வைக்கு பதிவிடப்பட்டது..

(என் அன்பிற்குரியவரும் – ஆசிரியருமான என் தாய் மாமன் ‘திரு.மோகன்’ அவர்களுக்கு நன்றி.

தொலைபேசி வழியாய்... இந்தக் கவிதை எழுத வைத்த அன்புக்கு நன்றி.

உலகம் இனிமையானது
உறவுகள் இனிமையானது
இயற்கை இனிமையானது)  

கோவத்திலே பேசிட்டேன்….. (கட்டுரை)

லகில் உறவில் - உணர்வில்…..

இரு இரு படுக்காளி வெயிட்..!! வெயி்ட் வெயிட் எ நிமிட்!, - ஜில் ஜில்ன்னு டைமிங் வர்ற மாதிரி, வில் வில்ன்னு ரைமிங் வர்ற மாதிரி எழுதிட்ட, நீ எதைப்பத்தி சொல்ற….

ஃபர்ஸ்ட்…. உலகில்…! ஓ! ஒக்கே..…. உலகத்தை பத்தி சொல்ற… ஓக்கே ரைட்டு. அப்புறம் உறவில்.! - அதாவது ஒன் டூ ஒன், ஒன் டூ மெனி, மெனி டூ மெனி… அப்படின்னு அக்கா தம்பிக்கு இடையில, அப்பா அம்மாவுக்கிடையில, புருசன் பொண்டாட்டிக்கு இடையில, தலைவன் தொண்டர்களுக்கிடையே, ஒரு குரூப்புக்கும் இன்னொரு குரூப்புக்கும் இடையில….…. ரைட்டு… ஒக்கே… அப்புறம் உணர்வில்.? அதாவது ஃபீல்…. கோபம், துக்கம், சந்தோஷம்.. மெர்சல்..… விவேகம்….. இப்படி… ஒக்கே ’கேரி ஆன்…’

உலகில் உறவில் உணர்வில், கொட்டப்படும் வார்த்தைகளுக்கு, அது தேனாக இருந்தாலும் சரி, தேளாக இருந்தாலும் சரி……

ஆஹா…. என்ன ஒரு வார்த்தை செலக்‌ஷன்… கொட்டுறது…..!!! அதுல தேன் தேள்ன்னு ’ஃபோனடிக் பஞ்ச் வேற…’ என்னா.! சுகம்யா நம்ம தமிழு……

ஹலோ.. நான் படுக்காளி பேசுறேன்..! யாருங்க நீங்க?. கட்டுரைக்கு நடுவுல பூந்துகிட்டு கமெண்ட் அடிச்சுக்கிட்டு, நடுவீட்டுல நாட்டாம பண்ணிகிட்டு… என்ன என் வேலைய செய்ய விடுங்க.. நீங்க உங்க வேலைய பாருங்க - என அவரிடம் பை…பை சொல்லிவிட்டு நம் வேலையை தொடருவோமே…

உலகில் உறவில் உணர்வில், கொட்டப்படும் வார்த்தைகளுக்கு, அது தேனாக இருந்தாலும் சரி, தேளாக இருந்தாலும் சரி…… அர்த்தம் இல்லை… அர்த்தம் இல்லவே இல்லை.

கோபத்தில் விழும் வார்த்தைகளுக்கும்…. போதையில் தள்ளாடும் தமிழுக்கும்….. மகிழ்ச்சியில் ஆர்ப்பரிக்கும் ஆங்கிலத்துக்கும்…..  அர்த்தம் இல்லை. சரிதான், புதுசா ஒரு டிக்‌ஷனரி தான் போடணும். உணர்ச்சி மிகும் தருணத்தில் சொல்லப்படும் வார்த்தைகளுக்கு, அதன் உண்மைப் பொருள் பொருந்தாது. 

கைக்கு கிடைக்கும் ஒரு கம்பை தேடி பாம்பை அடிப்பது போல், அப்போது நம் கையில் கிடைக்கும் வார்த்தையை கொண்டு உணர்ச்சியின் உச்சத்தின் மிச்சத்தை சொல்வதனால் தான் இப்படி அர்த்தம் இல்லாமல் போகிறது.

அது ஏன். எதனால் இப்படி நடக்கிறது…. ஏன் இப்படி அர்த்தம் இடம் மாறி விடுகிறது.

இதே பாம்பு செத்து போனது என்று வைத்துக் கொள்வோம். அப்ப சௌகரியமா நின்னு நிதானமா, நமக்கு தோதான ஒரு கம்பை எடுத்துக்கிட்டு போவோம் இல்லையா.

உணர்ச்சி வசப்பட்டு, அர்ஜெண்டாய் பேசுவதில் இரண்டு அடிப்படை காரணங்கள் உண்டு.

ஒன்று, இப்ப.. இப்ப…. இப்ப சொல்லியாகணும். ’ஒரு செகண்ட் கூட’ வெயிட் பண்ணக்கூடாது எனும் அவசரம்.

இரண்டாவது காரணம் – பயம்!, பயம் நிறைய காரணங்களால் வருகின்றன. உதாரணத்துக்கு எங்க ஏதாவது ஆகி, இந்த உணர்ச்சி மாறிடுமோ….”அதுக்குள்ள சொல்லிறனும்ல..” - என்பது கூட ஒன்று. என் இருப்புல இரும்பு விழுந்துருமோ, என் சுயம் காயப் படுமோ, என் அடையாளம் காணாமல் போகுமோ.. இப்படி ஏதோ ஒரு வகையில் பயம்… பயங்கர பயம்…

எனவே, இந்த இரண்டையுமே நம்மால் பகுக்க முடிந்தால், உணர முடிந்தால், மனித மனதை புரிய நினைத்தால்….. உணர்ச்சியின் வீரியத்தோடு  நாமும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாம்.

சரி, உணர்ச்சியில் சொல்லப்படும் வார்த்தைக்கு அர்த்தம் இல்லைதான். இல்லவே இல்லைதான். ஆனாலும், சொல்லிவிட்டு,….  உடனே… வெகு உடனே…… ‘நான் தெரியாம சொல்லிட்டேன்..  சாரி!’ எனும் வார்த்தையும் அது போலத்தான்……………….. அர்த்தமே இல்லாதது.

நம்மில் சிலருக்கு சாரி சொல்வது கஷ்டம், ரொம்ப கஷ்டம். அதுவே ஒரு சிலருக்கு… சாரி சொல்வது ரொம்ப ஈசி…. ஒண்ணு என்ன ஒம்போது சாரி சொல்றேன்… நீ எப்போ சொல்லணும்ன்னு சொல்றீயோ.. அப்ப சொல்றேன்.. அதுக்கென்ன போச்சு… என்பதாய் வரும் ’அர்ஜெண்ட் சாரிகள்…’ அர்த்தமே இல்லாதவை.

அவசரப்பட்டு வரும் சாரியில் ஒன்று நிச்சயம். உனக்குத் தேவை ஒரு வார்த்தை தானே.. வச்சுக்கோ… இந்தா…. வா… சாப்பிடு என அழைப்பது. போல் ஒரு சொல் கோர்வை அவ்வளவுதான். ஆனால் சாரிக்கான அர்த்தம் அது இல்லை….அதன் அர்த்தம் வேறு. அதனால் தான் சிலரால் சாரி சொல்ல முடிவதில்லை… இன்னும் சிலருக்கு உயிர் போய் விடுவது போல இருக்கும். அது ஏன்…?

தவறு என உணரப்பட, தன் சுயத்தை அலசி சுயம்புவாக… காலம் அவசியம். தவறு உணரப்பட்டால், மாற்றம் நிகழ வேண்டும்.. இந்த இரண்டும் நடக்கவில்லையெனில்… சாரி…. எனும் வார்த்தைக்கு…. ஸாரி போல அழகு இல்லை. ஆனாலும் கட்ட வேண்டிய விதத்தில், ஸாரி கட்டும் போது ஜம்முன்னு இருக்கும்….. சாரி தான் பெஸ்ட் என்பது தமிழன் இல்லாமல் வேறு யாருக்குத் தெரியும்.

உலகில் உறவில் உணர்வில்….. வில்… வில்…. வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல, வார்த்தைகளை திரும்ப பெற முடியாது. கடைசியில் நம் கையில் இருப்பது வெறும் வில் தான்… அதாவது தமிழ் வில் தான் இருக்கும். இதை உணரவும் ஆழமாய் உரைக்கவும்… ஆங்கில வில்…. (WILL POWER) வேண்டும்.

செம போதைப்பா….. என்னவோ சொன்னேன்… ஆனா தெரியாமல் சொல்லி விட்டேன்……  நான் சொன்னதுக்கு அர்த்தம் இல்லை.…. இது ஒத்துக் கொள்ளக் கூடியது என்றாலும். வார்த்தை பிரயோகத்தில் அர்த்தம் இல்லையென்றாலும், அது அம்மனிதரைப் பற்றிய குணாதிசயங்களை பல் இளித்துக் கொண்டு வெளியில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.

அது, சிந்திப்பவரின் மனத் தளம், சிந்திக்கும் பாங்கு, சிந்தனையின் விதம் என அத்தனையையும்… மொத்தமாய் வெட்ட வெளிச்சமாகிவிடும். உதாரணத்துக்கு பார்ப்போமே,

காசு ஏமாந்த ஒருவர் திட்டும் போது எப்படி திட்டுகிறார்… நாமும் பல சந்தர்ப்பங்களில் கேட்டது தானே.. உதாரணத்துக்கு சில கீழே.

  1.    நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டேடா, நாசமா போயிருவ… வெளங்காம போயிருவ… உருப்படவே மாட்ட
  2. என் காச எடுத்த பாரு… உன் கையில குஷ்டம் வந்து புழுத்து சாவ, ….
  3. சீ… நீயெல்லாம் மனுசனா.. உன்னையெல்லாம் நம்பி கொடுத்தேன் பாரு, என் புத்தியை சாணிய கரைச்சு ஊத்தி, பழைய செருப்பால அடிக்கணும்.


மேற்க்கூறிய … கூரிய தமிழ் வசவுகளுக்கான, மேலும் சில ஆப்ஷன்களையும் அதற்கான விரிவான விளக்கங்களையும், அது சொல்லும் சிந்திப்பவரின் குணாதிசயம் பற்றியும் தாங்களே யோசிப்பீர்கள் என்பதால், சில மட்டும் குறிப்பில்.

எல்லா வார்த்தைகளும் தடித்து, வலி உண்டாக்கும் கூரோடு இருந்தாலும் கூட, ஒன்றும் இரண்டும்… சொல்பவர் – ‘வினையாற்றுபவர்’. (REACTIVE) எனும் மனித வகை சார்ந்தது. அதுவே மூன்றாவது எண்ணில் குறிப்பிட்டுருக்கும் நபர் (PRO ACTIVE) தன் சார்பு நிலை கொண்டவர். எந்த நிகழ்வையும் தன் தோளில் சுமந்து, தன் கண்ணால் கண்டு, தன்னை மாற்ற முனையும் சிந்தனை கொண்டவர்.

காந்தியடிகள் சொன்னது போல ‘BE THE CHANGE…. THAT YOU DESIRE. மகாத்மா உதாரணம் காட்டியதால் அவரை நாம் உத்தமர் என ஸ்டாம்பு,,,, குத்த வேண்டியதில்லை… அவரது பழைய பிஞ்சு போன செருப்பு, சாணிய கரைச்சு ஊத்து… எனும் காட்சி விவரணை எதற்க்கும் சளைத்ததும் இல்லை.

அது போல, முதலும் இரண்டும் சொல்லும்… ‘வினையாற்றுபவர்’, நான் தப்பு பண்ணல… தப்பு பண்ணினது நீ… நீ நல்லா இருக்கக் கூடாது என முடிவெடுத்தாலும்… இரண்டாம் நபர் விவகாரமானவர். அவர் புழுத்தலையும், சீழ் வடிதலையும் மனசுக்குள் ஏற்றிக் கொண்டவர். அவர் சிந்திக்கும் தளமும், விதமும் முன்னவரில் இருந்து மிகவும் மாறுபட்டு இருக்கும்.

இப்படி…. கோபத்தில் விழும் வார்த்தைகள் கூட அதன் தொடக்கப் புள்ளியைச், ஆணி வேரை, அந்தரங்கத்தின் கிடப்பை அரங்கத்தில் சொல்லும் வீரியமிக்கவையாகவே உள்ளன.

செய்தித் தாள்களில் வழக்கமாய் ஒரு செய்தி வரும். அடையாளம் காணப்படாத ஒரு சடலம் கண்டெடுக்கப் பட்டதாய்…. பின் அதே செய்தியின் தொடர்ச்சியாக ஒரிறு நாட்களில் குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அது கொலையுண்டவரின் நண்பர் தான் கொலையாளி என்றும் வரும். மது அருந்தும் போது நண்பர்களிடையே ஏற்பட்ட சண்டைதான் கொலைக்கான காரணம் எனவும் வரும்.

தினம் ஒரு செய்தி இப்படி வருகிறது. நானும் வியந்து, அதெப்படி, அவர்கள் நண்பர்கள், போதையில் இருக்கிறார்கள். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்… ஏதோ ஒரு உணர்ச்சியின் வேகத்தில் கத்தியை எடுத்து…. எப்படி  குத்த முடியும்… ஜஸ்டிஃபை செய்ய முடியவில்லையே என குழம்பியிருக்கிறேன்…. இப்போது உணர்வைக் குறித்து சிந்திக்கும் போது இப்படி தோன்றுகிறது.….

மூன்று ஆப்ஷன்களாக மேலே சிந்தித்த வசவுச் சொற்களில், மேலும் ஒன்றை பொருத்திப் பார்ப்போமே…
4.   
  • 4.     பணம் காசுக்குத்தான செஞ்ச… இதுக்கு பேசாம உங்கொம்மாவ _______

(இதற்கு மேல், எழுத என்னால் முடியாது. அச்சில் ஏறத்தகாத சொற்களை சொல்லவோ… அல்லது அவன் சொன்னான் .. இதைத்தான் சொன்னான் என இன்றைய பின் நவீனத்துவ மொழியோ… கேடு கெட்ட எந்த வார்த்தைகளையும் திரும்பிக் கூட சொல்வது எனக்கு ஏற்புடையது அல்ல… என் மாண்புக்கு அந்த மரபும் இல்லை.)

ஆனால், இப்படி ஒரு நாலாந்திர சிந்தனை இருந்து… மேலே குறிப்பிட்டது போல அது போதையில் சொல்லப்பட்டால், அதிலும் கேட்பவன் எங்கூரு.. தூத்துக்குடி காரனாக இருந்து…. அவன் கையில் கத்தியும் இருந்திருந்தால்…

என்ன நடந்திருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

உணர்வும், அது நிகழ்த்தும் நாடகங்களும் வாழ்க்கையில் வினோதமானவை. இன்றைய நிறைய வாழ்க்கை குளறுபடிகளுக்கு அடிப்படை காரணம் இத்தகைய உணர்வின் வெளிப்பாடு மீறல்களே….

மனம் ஒரு தங்கத்தட்டு…. அதை மலரால் அலங்கரிப்பதா இல்லை… மலமா எனும் ,மிகப்பெரிய சாய்ஸ் நம்மிடம் தான் இருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட அந்த தங்கத்தட்டு….. நம் மனசுதான்… நம்மிடம் பழகுபவருக்கு பந்தி வைக்கப் போகிறது. அது தான் அவரை நம்மிடத்தில் வர வைக்கிறது.

மலம் பார்த்தால், முகம் சுளித்து… ஓடும் கூட்டம் தானே இங்கு உண்மை.. இல்லை… நான் மலம் வைத்துக் கொள்கிறேன்.. நீ வா இங்க குளுகுளுன்னு காத்து வரும்… சாப்பிடு என்றால் அது நடக்காது.

விவகாரமான ஒரு வார்த்தைக் கோர்வை நம் உணர்வு மீறலில் வெளிப்பட்டால் .. எங்கிருந்து இந்த வார்த்தையை கற்றுக் கொண்டேன்… ஏன் இதை என் சிந்தனையில் அனுமதித்தேன்.. அதை எப்படி வெளியேற்றுவது இது போல், சிந்தனைகளை கற்றுத்தரும் சாக்கடைகளை உடன் விட்டு விலகுவது எனும் தீர்மானங்கள் தான் உங்கள் நேரத்தின் முக்கியத்துவத்தை உங்களுக்கு உணர்த்தும்….

இப்படி தெளிவாக எடுக்கும் முடிவு தான்…. உங்களுக்கு நல்லது.

தாங்கள் செல்ல வேண்டிய இலக்கின் தூரம் இலகுவாகும்….

அதுவே உங்கள் இலக்கை அடையச் செய்யும் இறகுகளை உங்களுள் முளைக்கச் செய்யும்.

வாழ்த்துக்கள்.. அன்புடன்…  

‘நான் கிருஷ்ணா தேவராயன்’ ஒலிப்புத்தகம் வெளியீடு....


அன்புடையீர்


நாளை ... (9th APRIL 2017)                   ‘நான் கிருஷ்ணா தேவராயன்’ ஒலிப்புத்தகம் வெளியீடு....


அவசியம்  வாருங்களேன்...  அழைப்பிதழ் கீழே உள்ளது...

நான் கிருஷ்ணா தேவராயன்’ ஒலிப்புத்தகம் ஒரு நல்ல உணர்வு பயணம்
காதல்...ஏக்கம்தனிமை... தவிப்பு... .. இயலாமை.என காதலில் அவரோடு நாமும் தவிப்போம் .....

சரித்திரம் குறித்தும்... அன்றைய....  சம்பிரதாயங்கள் குறித்தும்..  அறியும் போது... வியப்பாக   இருக்கும்...

இதை கேளுங்களேன் ....

அன்றைய துளுவ வம்சத்து சக்கரவர்த்திகள்... அரண் மனைக்குள் நடக்க மாட்டார்களாம்.. !!!!!

அப்புறம் எப்படி என்றால்....  அவருக்கு உலவ வேண்டும் என்றால். கையை தட்ட வேண்டுமாம்...அழகிய இளம்.. பெண் வந்து... திரும்பி நின்று... குந்தி அமருவாளாம்...  ராசா  ஏறி அமர்ந்ததும் உப்பு மூட்டை சுமந்த படி.. செல்ல வேண்டுமாம்...  ... எப்படி இருக்கிறது கதை..

சென்ற மாதத்தில், ஒரு நாள், நண்பர் பம்பாய் கண்ணன் தொலைபேசியில் அழைத்தார்.

லாரன்ஸ்... ஒரு சின்ன வேலை.. அந்த, ஆடியோ .. புக்  ‘நான் கிருஷ்ணா தேவராயன் ….. அதில ஒரு இடம்  உங்க . உச்சரிப்பு சரி. இல்ல... டைம் கிடைக்கும் போது போய் பண்ணிடுங்க  நாராயணனுக்கு தெரியும் என்றார்...

நான்  எதிராஜாவா  நடித்துள்ளேன்.... ஓக்கே டன் சார்... என்றேன்....

இரண்டொரு நாளில், ஸ்டுடியோ .. சென்று நாராயணனை பார்த்தேன்.. 

ஆசார அனுஷ்டானங்கள்... அதில் ஆசார என்பதை... ... ஷ்...  ஷ் ஷா ரா... என்பது போல் செய்திருந்தேன்.. அதன் சரியான உச்சரிப்பு  ஆசாரம் தான்..
இரண்டு வார்த்தைகள் தான், மிக எளிதான கரெக்க்க்ஷன்   ... தான்.. ஆனாலும் சட்டென எனக்கு பதறியது...

காரணம்...

இந்த ஒலிப்பதிவு  செய்தது சில மாதங்களுக்கு முன்னால் ... அப்போது எனக்கு நல்ல மூக்கடைப்பு. ... ஆனால் இன்றோ எல்லாம் திறந்து இருக்கிறது.... எப்படி சமாளிப்பது... ஜம்ப் தெரிந்து விடுமே...

நாராயணனிடம்.. தலைவா.. ஒருஹெல்ப்... கொஞ்ச்ம லாங் கியூ.... கொடுங்க.. என சொல்லி.. ஹெட் போனை மாட்டி... கண்ணை மூடி. கொண்டேன்..

ஓவொரு வார்த்தையிலும் அணுக்ககத்திலும் ஒலியிலும் கவனம் செலுத்தினேன்... அதே அணுக்கத்தோடு, இந்த இரு வார்த்தைகளையும் சட்டென சொல்லி முடித்தேன்.... ஹாப்பி..... அப்பாடா தப்பித்தேன்….

எத்தனையோ.... நேர மெனக்கெடல்களும்.. சிரமங்களும் சுமந்து வரும் இது போன்ற  கலை படைப்புக்கள்.. மனதுக்கு தரும் இதம் இருக்கிறதே...

நாளை.. பாருங்களேன் .. 

பேராசிரியர்... மற்றும் என் ரசிகர்.. திவாகர்... வந்து... என் .. கையை பிடித்து... பேசுவார்... 

ஹாங் லாரன்ஸ்...  இதையும் கேட்டுட்டு.... போன் பண்றேன்.. என்பார்.. 

நான்.. கண் கசிந்து.. அவரது.. பார்க்காத விழிகளை பார்த்து கொண்டே நிற்பேன்.. அவர் மட்டும் முகம் மலர்ந்து.. பற்கள்.. தெரிய பேசுவார்...  

என்ன செய்ய முடியும் அவரது அன்புக்கு முன்னால்….. 


https://www.facebook.com/photo.php?fbid=700671110058094&set=a.171304329661444.16351.100003456350992&type=3&theater